Wednesday, 17 August 2011

அன்னா ஹசாரே‍ - சில கேள்விகள்

ஊழலில்லா நாடு அமைப்பதே வல்லரசாக்குதலின் அடிப்படை என்பது நிதர்சனம்.ஆனால் அந்த ஊழலை ஒழிக்க  இப்போது கையாளப்படும் வழிமுறைகள் உண்மையிலேயே பயனளிக்குமா?

அன்னா ஹசாரே ஒரு சமூக சேவகர். தன் கிராமத்தில் பலச் சீர்திருத்தங்கள் செய்தார்.தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டுவந்ததில் அவரது பங்கு மகத்தானது இதெல்லாம் போற்றத்தக்கது தான்.ஆனால் லோக்பால் விஷயத்தில் அவரது அணுகுமுறை சரியானதா?

அன்னா ஹசாரே குழுவின் போராட்டட்த்தில் எனக்கு பதில் தெரியா சில கேள்விகள். தெரிந்தவர்கள் தெரியவைத்தால், என்னைப் போல இருப்பவர்கள் தெளிந்து கொள்வோம்.

தன்னுடைய குழு அமைத்த சட்டத்தைத்தான் பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்றால், பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமையில் தலையிடும் செயல் அல்லவா அது?

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைக்குத் தான் அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தானே மரபு.அதை விடுத்து,  நாட்டில் இருக்கும் எவரையும் விசாரிக்கும்,குற்றம் சாட்டும் அதிகாரம் கொண்ட அமைப்பாக லோக்பால் அமைக்கப்பட்டால் அது ஜன நாயக அடிப்படையை அசைத்துப் பார்க்காதா?
இதே போல நாட்டில் மீடியாக்கள் ஆதரவைப் பெற்ற ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கேற்ப உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் என செய்ய ஆரம்பித்தால் பின்னர் ஆட்சியின் நிலை " தடியெடுத்தவன் தண்டல்காரன்" என்பதுதானே?
அரசு அமைத்த லோக்பால் சட்டத்தில் முன்னாள் பிரதமரை விசாரிக்கும் உரிமையும், எக்குற்றமும் நடந்து ஏழு ஆண்டுகள் வரை புகார் அளிக்கலாம் என்னும் வழிமுறையும் உள்ளதே. பிரதமரது ஆட்சிக்காலம் முடிந்தபின் விசாரிக்கலாமே.
ஒரு நாட்டின் பிரதமர் மீது உண்மையாகவோ, பொய்யாகவோ ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அது உலக அரங்கில் நம்பகத்தன்மையை குலைக்கும் செயலாகுமே.எதிர்காலத்தில் வரும் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களும் நேர்மையாளர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
அரசின் மசோதா முழுமை பெறாத ஒன்றாக அன்னா ஹசாரே குழு கருதினால், இப்போதே போராட்டம் நடத்தி மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கச் செய்வதை விட்டு,  இப்பிரச்சினையை தேர்தல் நேரத்தில் மக்களிடையே கொண்டு சென்று,ஆதரவானவர்களை பிரதி நிதிகளாக்கி சட்டத்திருத்தம் கொண்டுவரச் செய்யலாமே?

அதேபோல மத்திய அரசு அன்னா ஹசாரே விஷயத்தில் பயப்படுவது ஏன்?
பல நாட்களாக, ஆளும் அவைகள் ஸ்தம்பிக்கின்றன. அரசு இயந்திரத்தின் முழு கவனமும் இந்த விஷயத்திலேயே இருக்கிறது. திடமான முடிவாக அவரைக் கைது செய்துவிட்டு, பின்னர் வெளியே வாருங்கள் என அவரிடம் கெஞ்சுவது ஏன்?
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவமென்பது இழுக்கு"

இது கூடத் தெரியாதவரா தமிழரான உள்துறை அமைச்சர்?

உண்மையிலேயே பயம் இருந்தால் அவரது கோரிக்கையை நிறைவேற்றலாமே?
நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகுற மாதிரி அழு " என்னும் கண்ணாமூச்சி நாடகம் நடக்கிறதோ? இதற்கெல்லாம் வீணாவது மக்களின் வரிப்பணமும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் தானே?

அன்னா ஆதரவாளர்களே,
உங்களின் எத்தனை பேர் எதிர் வரும் தேர்தலில் போட்டியிடவோ, அல்லது போட்டியிடும் நேர்மையாளர்களுக்கு ஓட்டுப் போடவோ உங்கள் பணியிடத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு செல்லத் தயாராக இருக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றுக்கு  ஒரு பைசா  கையூட்டும் தராதவர்கள்? ஊழலுக்குக் எதிராகக் கொடி பிடித்த கையால் இனி ஒரு காரியத்துக்கு லஞ்சம் தரமாட்டேன் என மனசாட்சியுட‌ம் உறுதி எடுக்க உங்களால் முடியுமா?

தமிழர்களிடம் ஒரு ஸ்பெஷல் கேள்வி.
இதே போன்றதொரு போராட்டத்தை ஈழத்துச் சகோதர உறவுகளுக்காக முன்னெடுத்து உங்களால்  மத்திய அரசை பணிய வைக்க முடியாதா?

.



9 comments:

thiagu1973 said...

தமிழ் ஈழ பிரச்சனை உள்நாட்டின் ஊழல் பிரச்சனை என போட்டு குழப்பி இருக்கிறீர்கள்

settaikkaran said...

//தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டுவந்ததில் அவரது பங்கு மகத்தானது //

யார் சொன்னது? :-)

தகவல் உரிமைச்சட்டத்தை மகாராஷ்டிராவில் கொண்டுவர போராடினார் என்று சொல்லுங்கள்! ஆனால், அவர் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட விபரங்களை இன்னும் வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார். (அதில் எனது மனுவும் அடங்கும்).

மேலும், தனது வலைத்தளத்தில் தகவல் உரிமைச் சட்டத்துக்கான மனுவை மராட்டி மொழியில் வைத்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

//பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமையில் தலையிடும் செயல் அல்லவா அது?//

கண்டிப்பாக!

//அதேபோல மத்திய அரசு அன்னா ஹசாரே விஷயத்தில் பயப்படுவது ஏன்//

ஹிஹி! மத்திய அரசு ஒரு டம்மி பீஸ்! அதை நானும் நீங்களோ கூட பயமுறுத்தலாம். :-)

//இதே போன்றதொரு போராட்டத்தை ஈழத்துச் சகோதர உறவுகளுக்காக முன்னெடுத்து உங்களால் மத்திய அரசை பணிய வைக்க முடியாதா?//

பொருத்தமற்ற கேள்வி! அது தேசியப்பிரச்சினை அல்ல.

மக்களின் வரிப்பணத்தை இலவசங்களுக்குச் செலவிடுவது ஏன் என்று போராடக்கூடாதா என்று கேட்டிருக்கலாம்.

முதல்முயற்சி! பாராட்டுகிறேன்.

settaikkaran said...

அப்புறம், இந்த word verification-ஐ எடுத்து விடுங்கள்! முடியுமானால் comments புதிய pop-up window-வில் வருகிற மாதிரி மாற்றியமையுங்கள்! கருத்துச் சொல்ல வருகிறவர்களுக்கு வசதியாய் இருக்கும்.

RaThi Mullai said...

எனக்கு இரண்டும் முக்கியப் பிரச்சினைகளாகத் தெரிகிறது.அதனால் இரண்டையும் ஒப்பிட்டு இருக்கிறேன்.

RaThi Mullai said...
This comment has been removed by the author.
RaThi Mullai said...

@சேட்டைக்காரன்

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. ஆலோசனைகளுக்கும் நன்றி

RaThi Mullai said...

@சேட்டைக்காரன்
தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அவரது பங்கு உண்டுன்னு உள்துறை அமைச்சர் சொன்னதாக பத்திரிக்கையில் படித்தேன்.அது வச்சுததான் இது எழுதினேன். உங்களின் மேலான தக‌வலில் அதிகம் அறிந்து கொண்டேன்.

என்னைப் பொறுத்த்வரைக்கும் இனப்பிரச்சினையோ, தேசியப் பிரச்சினையோ பிரச்சினைன்னா அதுக்கு ஒரு நல்ல முடிவு வேணும்.அவ்ளோதான்

மகேந்திரன் said...

இரண்டு பிரச்சனைகளை எடுத்து
அழகாக ஒப்பிட்டு இருக்கிறீர்கள்.

என் தளம் வந்து கருத்திட்டதற்கு மகிழ்ச்சி

தொடர்ந்து எழுதுங்கள்.

RaThi Mullai said...

@ மகேந்திரன்

நன்றி. உங்கள் தளம் அருமை